தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை ரூ.4 உயருகிறது!2140040864


தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை ரூ.4 உயருகிறது!


சென்னை,

தமிழகத்தில் தினமும் சுமார் 2¼ கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் அரசு நிறுவனமான 'ஆவின்' மூலமாக 38.26 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள பாலை தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்களே கொள்முதல் செய்கின்றன.

தனியார் பால் நிறுவனங்கள் அவ்வப்போது விலையை உயர்த்துவது வழக்கம். 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்குக்கு முன்பு தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.6 அதிரடியாக உயர்த்தப்பட்டது. தினசரி பால் உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பதாலும், டீக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை தனியார் பாலையே உபயோகிப்பதால் தனியார் பால் உற்பத்தியாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்துவதை வாடிக்கையாக கொண்டிருப்பதாக பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

லிட்டருக்கு ரூ.4 உயர்வு

இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதம் ஒரு முறையும், மே மாதம் ஒரு முறையும் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் 3-வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உயருகிறது.

அதன்படி சீனிவாசா பால் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி இருக்கிறது. ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்த இருக்கிறது. மற்ற நிறுவனங்களும் பால் விலையை அடுத்தடுத்த நாட்களில் உயர்த்த திட்டமிட்டுள்ளன. அதன்படி லிட்டருக்கு ரூ.4 வரை விலையை உயர்த்த பல தனியார் பால் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

தனியார் பால் விலை உயர்வு காரணமாக பால் சார்ந்த இதர பொருட்களும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் அதிர்ச்சி

இந்த புதிய முடிவு, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் 84 சதவீத பாலின் தேவை, தனியார் பால் நிறுவனங்கள் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால் எந்தவித யோசனைகளும் செய்யாமல், யாருடைய கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக பால் நிறுவனங்கள் விலையை அதிகரித்து வருகிறார்கள். இந்த போக்கு மிகவும் தவறானது. கொரோனா காலத்தில் விற்பனை சரிந்து விட்டதாக கூறி விலையை உயர்த்தினார்கள். இப்போது நிலைமை சீரடைந்து வரும் நிலையில் எதற்காக இந்த உயர்வு? தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு தனியார் பால் விலை நிர்ணயம் குறித்து சரியான வரைமுறைகளை கையாள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பால் முகவர்கள் கோரிக்கை

இதே கோரிக்கையை பால் முகவர்களும் விடுத்துள்ளனர். 'தனியார் நிறுவனங்கள் பாலின் விலையை உயர்த்துவதை வரைமுறைப்படுத்த பால் விலையை அரசே நிர்ணயம் செய்யவேண்டும். இதற்காக பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை ஒழுங்கு முறை ஆணையத்தை அரசு அமைக்கவேண்டும்', என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

CSK: ‘தோனிக்கு அடுத்து’…புது கேப்டன் யார்? ஜடேஜா இல்லையாம்..ரேசில் 2 பேர்..வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு?